போராடினால் மட்டுமே தமிழர்களின் இருப்பை பாதுகாக்கமுடியும்; அழைப்பு விடுத்துள்ள சிறிதரன்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் மக்கள் தமது இருப்பினை தக்கவைப்பதற்காக எல்லாவழிகளிலும் போராடவேண்டிய நிலைக்கு இன்றை காலச்சூழலில் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாளைய தினம் பொது முடக்கத்திற்கு சிறீதரன் அமைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் தமது இருப்பினைத் தக்கவைப்பதற்காக எல்லா வழிகளிலும் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலச்சூழலில், தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பை மேலும் கேள்விக்கு உட்படுத்தும் வகையில் சிங்கள இனவாத அரசும் அதனுடன் இணைந்த அரச திணைக்களங்களும் திட்டமிட்டு மேற்கொள்ளும் இன, மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியதும், எமது மக்கள் தமது நியாயமான எதிர்ப்பைப் பதிவுசெய்வதற்கான கருத்துச் சுதந்திரத்தைக் கூட பறிக்கும் சரத்துக்களை உள்ளடக்கியுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்க்க வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ள நிலையில், இவ்விரு கோரிக்கைகளையும் பிரதானமாக முன்னிறுத்தி ஹர்த்தால் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே இன, மொழி, பிரதேச வேறுபாடுகளை களைந்து அனைவரும் இதற்கு ஆதரவளிக்க முன்வர வேண்டுமென்றும் சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.