ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு நாளை (20) பயணிக்கவுள்ளார்.
இந்திய விஜயத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் இன்று கருத்துகளை முன்வைத்தன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய சந்திப்பில் பங்கேற்கவில்லை.
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனைகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்விற்கு இணங்கினால் மாத்திரமே 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
நேற்றைய கலந்துரையாடல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கருத்து தெரிவித்தார்.
பிரச்சினைகளுக்கான தீர்வினை ஜனாதிபதி பெற்றுத்தருவார் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் சர்வதேசத்திற்கு காண்பிக்கும் ஒரு நாடகம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பிலோ இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலோ எவ்வித உருப்படியான திட்டமும் ஜனாதிபதியிடம் இல்லை என சுமந்திரன் கூறினார்.
உலகிற்கும் இந்தியாவிற்கும் காண்பிக்கும் நாடகமாகவே இந்த சந்திப்பை ஜனாதிபதி ஒழுங்குபடுத்தியிருந்ததாகவும் சமஷ்டி முறையிலான ஆட்சி மாற்றம் தேவை என தாம் வலியுறுத்தியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
எனினும், 13 ஆவது திருத்தத்தில் இருப்பதைக் கூட முழுமையாக அமுல்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் தான் ஜனாதிபதி இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.