ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் – ஆதாரங்களுடன் மு.கா.தலைவர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு..!

ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் – ஆதாரங்களுடன் மு.கா.தலைவர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு..!

சிலர் அரசியல் நோக்கம் ஒன்றை அடைந்து கொள்வதற்காக, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் இருந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை கத்தோலிக்கப் பேராயரையும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பிரஸ்தாப குண்டுத் தாக்குதல்  பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையையும் ஆதாரம் காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பலஸ்தீன யுத்த நிலைமையை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை(20) நடைபெற்ற பொழுது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் .

அங்கு உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது, 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்நாட்டின் கத்தோலிக்க சமயத் தலைவரான பேராயரை நாங்கள் சென்று சந்தித்தோம். அமைச்சர்களான பௌஸி, கபீர் ஹாஷிம் ,ரிஷாட் பதியுத்தீன் ஆகியோரும்  என்னுடன் வந்திருந்தனர். அப்பொழுது நாங்கள் எங்களது கவலையை தெரிவித்த பொழுது பேராயர், “ஏன் நீங்கள் இதற்காக கவலைப்படுகிறீர்கள்?  இதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் பொறுப்பல்ல”எனக் கூறிவிட்டு, இது மத்திய கிழக்கு நாடொன்றின் வேலை என்றும்,இஸ்ரேல் இதன் பின்னணியில் இருந்துள்ளதாக சந்தேகிப்பதாகவும் கூறினார். 

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மீது அப்பொழுது தாக்குதல் மேற்கொள்ளப்படாமல் தடுத்ததற்காக நாங்கள் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

இன்றைய(20) டெய்லி நியூஸ் பத்திரிகையில் “காஸா யுத்தம் இஸ்ரவேல் பலஸ்தீன் மோதல் “என்ற தலைப்பில் பேராசிரியர் எனக் கூறிக்கொள்ளும் ரொஹான் குணரட்ன என்பவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் .அதன் தலைப்பு அவ்வாறு பொதுவாக இருந்த போதிலும், அதன் உள்ளடக்கம் நடுநிலையானதாக இல்லை .அவர் பேராசிரியர் என்று கூறிக் கொள்வது தொடர்பில் பாராளுமன்ற குழு அறை ஒன்றில் நான் அவருடன் நேரடியாகவே முரண்பட்டுள்ளேன். அது வேறு விஷயம்.  முன்னர்  ஒருபோது அவர்  சஹரானை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி எங்களுக்கு புத்திமதி சொல்ல வந்தார். அவருடைய கட்டுரையில்  எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவர் ஒரு பக்க சார்பாகவே நடந்து கொள்கிறார் இதற்கு ஐ .எஸ் தான் பொறுப்பு என்ற அவர து  தவறான நிலைப்பாட்டை  நிரூபிப்பதற்காக  அவர் அபாண்டங்களைக் கூறி வருகிறார்.

ரொஹான் குணரட்ன அவரது கட்டுரையில் இஸ்ரேலின் மொஸாட் உளவுத் துறை, நிபுணத்துவம்,அதன் பரந்துபட்ட வலையமைப்பு என்பன பற்றியெல்லாம் சிலாகித்து எழுதியுள்ளார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த குண்டு தாக்கல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணை குழுவின் அறிக்கை இதோ இருக்கிறது. நீதியரசர் ஜனக் டீ சில்வா தலைமையிலான அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் அதன் 106ஆம் பக்கத்தில் காணப்படுவதாவது,

சஹ்ரான் ஐ.எஸ் ஆதரவாளர்கள் பற்றி 

 விழிப்பாக இருந்ததாகத் தோன்றுகிறது.  ஆனால், அவர்கள் வேறு  உளவாளிகள்.

2018 அக்டோபர் 10ஆம் தேதி சஹரான் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கடிதத்தைப் பதிவிட்டு இருந்தார் அதில் ,பக்கம் பின் அபூ என்பவர்  பற்றி இருந்தது .அவர் ஒரு  நாட்டின் உளவுத்துறையின் முகவர் என்கிறார். அவர் இவர்களைப் பற்றி அந்த வெளிநாட்டு

 உளவுத்துறைக்குத்

தகவல்களை வழங்கி வந்ததாகக் கூறுகிறார் .

அதற்குப் பதிலாக, 11. 10 .2018 அன்று, பக்கம் பின் அபூ என்பவர், சஹ்ரான் இஸ்ரேல் உளவுத்துறையின் முகவர் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

 சஹ்ரான் இஸ்ரேலினால்  வாங்கப்பட்ட  முகவராக (ஏஜென்ட்) இருந்து, இங்கு செயற்பட்டிருக்கின்றார்.

பேராயர் எங்களிடம் தெரிவித்த சந்தேகமும் அதனையே உறுதிப்படுத்துகின்றது.

இந்த நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு என்ன இருக்கிறது? ஏன் கிறிஸ்தவர்களின் புனிதமான தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் ?உல்லாச பயணிகள் மீதும்,சில ஹோட்டல்களை விட்டுவிட்டு சில ஹோட்டல்கள் மீதும் ஏன் தாக்குதல் நடத்த வேண்டும்? புனிதமாக கருதும் உயிர்த்த  ஞாயிறு தினத்தில் அதனை ஏன் செய்ய வேண்டும்? இஸ்ரேலர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் உயிர் வாழ்வதற்காக எதனையும் செய்யத் துணிந்தவர்கள். அவர்களிடம் நீண்ட காலத் திட்டங்கள் உள்ளன .

இந்த நாட்டில் சிங்களவர்களும் தமிழர்களும் அவர்களது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகப் போராடினார்கள் ஆனால், முஸ்லிம்களுக்கு அவ்வாறான என்ன அரசியல் நோக்கங்கள் இருந்தன ?  இல்லை.

  இப்பொழுதும்  கூட ஜே.வி.பி.யினர் “இல் மஹ விரு தின “என விஜயவீரவை ஒரு வீரராகக் கொண்டாடுகிறார்கள். பிரபாகரன் பிறந்த நாளை நினைவு கூர்ந்து தமிழ் மக்கள் அவரது பிறந்த நாளை ஆண்டு தோறும் கொண்டாடுகிறார்கள் .ஆனால், முஸ்லிம்கள்  கொடிய பயங்கரவாதி சஹ்ரானுக்கு ஜனாஸா   தொழுகையாவது தொழுதோமா? இங்குதான் வித்தியாசம் இருக்கிறது.

 முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் பிரித்து வைத்து, அவர்களுக்கு வேண்டியவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக அவ்வாறு செய்தார்கள்.

அமைச்சர் சரத் வீரசேகர இன்று(20) காலையில் இங்கு பேசும் பொழுது, இஸ்ரேல் இலங்கை  அரச படைகளுக்கு அதிகமான உதவிகளைச் செய்துள்ளதாக சிலாகித்துக் கூறியுள்ளார். இஸ்ரவேல்  இலங்கை அரச படையினருக்கு  1980 களின் நடுப்பகுதியில் யுத்தப் பயிற்சி அளித்த அதே வேளையில் , அதற்குச் சமாந்தரமாக தமிழ் போராளிகளுக்கும் பயிற்சி அளித்தது பற்றி இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும் .இதனை பேராயரும் நாங்கள் அவரைச் சந்தித்தபோது  உறுதிப்படுத்தினார்.

பலஸ்தீனத்தில், காசாவில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ,அங்கு வைத்தியசாலை மீது பாரிய தாக்குதல் நடத்தி, படுகொலைகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்க ஜனாதிபதி டெல் அவீவிற்குச் சென்று பிரதமர் நெடென்யாஹுவை ஆறத் தழுவி உற்சாகப்படுத்தியதும், மறுநாளே பிரித்தானியப் பிரதமரும் அங்கு சென்று இஸ்ரேலிய பிரதமரை சந்தித்து அரவணைத்து ஊக்குவித்ததும் விசனம் அளிக்கின்றன.

பாலஸ்தீனத்தில்

  நடைபெறுகின்ற யுத்தம்  பாரிய அளவிலான பேரவலங்களை ஏற்படுத்தி வருகிறது. கைப்பற்றப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை முற்றிலும் மீறி, இஸ்ரேலிய அரசாங்கம்  யுத்தக் குற்றங்களையும் இனச் சுத்திகரிப்பையும் மேற்கொண்டு  வருகிறது .அதற்கு மேற்குலகும் ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறது. அதனை இதே வேளையில் அவ்வாறான  நாடுகள் உட்பட உலகெங்கும் அதனை கண்டித்து மக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

 பாலஸ்தீன  மக்கள் அனுபவித்து வரும் அவலங்களை உலகம் கவனிக்க வேண்டிய நேரம் இது. உலகம்  இனி மேலும் பலஸ்தீன மக்களை வேறுபடுத்திப் பார்க்க கூடாது. ஆயிரக்கணக்கான சிசுக்களும் குழந்தைகளும் சிறுவர்களும் பெண்களும் முதியவர்களும்  இஸ்ரவேலினால் கோரமாகக் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். வெள்ளை பொஸ்பரஸ் இரசாயனத் துகள்கள் அடங்கிய குண்டுகள் உட்பட ,குண்டு மாரி அவர்கள் மீது பொழியப்படுகின்றது. வைத்தியசாலைகளும் ,பள்ளிவாசல்களும், பாடசாலைகளும் தரைமட்டமாக்கப்படுகின்றன. மின்சாரம், நீர் வினியோகம் போன்றவை துண்டிக்கப்பட்டுள்ளன .நீண்ட காலமாகவே காஸா முதலான பலஸ்தீன பிரதேசங்களில் மக்கள் “திறந்த வெளி சிறைச்சாலை”யில் வாழ்வதாகவே  கருத வேண்டி இருக்கிறது என்றார்.