நசீர் அஹமட் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு பிக்குகள் எதிர்ப்பு, ஜனாதிபதி ரணிலுக்கு சென்ற கடிதம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – – சிங்களத்தில் : புஷ்பகுமார ஜயரத்னஇ தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்இ நன்றி: லங்காதீப –
வெற்றிடமாகிய வடமேல் மாகாண சபையின் ஆளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சரான நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை வடமேல் மாகாண திரைய் நிக்காய பிக்குகள் ஒன்றியம் எதிர்த்து பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அத்தோடு வடமேல் மாகாண திரைய் நிக்காய (மூன்று நிக்காயாக்களின்) பிக்குகள் ஒன்றியத்தின் தேரர்கள் குழுவொன்று வடமேல் மாகாண ஆளுநரின் செயலாளர் இந்திக இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்ன ஆகியோரை கடந்த மாதம் 30ஆம் திகதி சந்தித்து இந்நியமனம் தொடர்பில் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
என்கந்த ரஜமகா விகாரை அதிபதி அஸ்கிரிய பிரிவு அநுநாயக்க ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் கையொப்பம் மற்றும் வடமேல் மாகாண பிரதான தேரர்கள் பலரின் கையொப்பங்கள் அடங்கிய, நஸீர் அஹமட்டின் நியமனத்துக்கு எதிரான மகஜரொன்று வடமேல் மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.
குறிப்பிட்ட மகஜரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்குமாறு தேரர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட புத்தசாசன பாதுகாப்பு சபையின் பிரதம செயலாளர் வடுகெதர சாராநந்த தேரர் கருத்து வெளியிட்டார். அவர் அங்கு உரையாற்றுகையில்,
‘எமது நாட்டின் மிகவும் முக்கிய பெளத்த மரபுரிமைகளுக்கு வடமேல் மாகாணம் சொந்தமாக உள்ளது. இவ்வாறான பெளத்த மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள வடமேல் மாகாணத்தின் முக்கிய அரச பதவியொன்றுக்கு பெளத்தர் அல்லாத வேற்று மதத்தவர் ஒருவரை ஜனாதிபதி நியமித்திருப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எதிர்க்கிறோம். வடமேல் மாகாண ஆளுநர் பதவிக்கு வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரோ அல்லது வடமேல் மாகாணத்துக்கு வெளியில் தகுதியான ஒருவரோ நியமிக்கப்பட வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.
பெளத்த வரலாற்றுக்கு உரிமை கோரும் வடமேல் மாகாணத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு பெளத்த தலைவர் ஒருவரே அங்கு ஆளுநராகக் கடமை புரிய வேண்டும். பெளத்தர் அல்லாத ஒருவர் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால் அங்கு பல பிரச்சினைகள் உருவாக காரணமாக அமையும். அதனால் வடமேல் மாகாணத்தில் பிரச்சினைகள் உருவாகாமலிருப்பதற்கு அங்கு தகுதியான ஒருவரை ஆளுநராக நியமிக்கும்படி அரசாங்கத்தைக் கோருகிறோம்.
அவ்வாறு தகுதியான ஒருவர் வடமேல் மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்படாவிட்டால் வடமேல் மாகாண மூன்று நிக்காயாக்களின் பிரதிநிதிகளான தேரர்கள் நாம் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியேற்படும்” என சாராநந்த தேரர் தெரிவித்தார்.
இதற்கு முன்பும் வடமேல் மாகாணத்துக்கு ஆளுநராக எம்.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் இது போன்றே தேரர்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள். இறுதியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து எதிர்ப்புகளையும் முன்னாள் ஆளுநர் முஸம்மில் வெற்றிகொண்டு தேரர்களுடன் இணைந்து தனது கடமைகளை முன்னெடுத்து வந்தார். தேரர்களின் நம்பிக்கையை அவர் பெற்றிருந்தார். பெளத்த மத விவகாரங்களைக் கையாள்வதற்காக அவர் பிரத்தியேகமாக செயலாளர் ஒருவரையும் நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.