தேசபந்துவை தேடுவதற்கு என்ன காரணம்? நீதிமன்றில் வௌியான தகவல்கள்

தேசபந்துவை தேடுவதற்கு என்ன காரணம்? நீதிமன்றில் வௌியான தகவல்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுத்த கோரிக்கை தொடர்பான உத்தரவை எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.

மாத்தறை வெலிகமவில் உள்ள “W15” ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த மனுவை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி மொஹமட் லஃபார் தாஹிர் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

மனு பரிசீலனை தொடங்கியபோது, ​​மனுதாரரான தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது கட்சிக்காரர் ஏற்கனவே பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி வருவதாகவும், அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி மொஹமட் லஃபார், ஜனாதிபதி சட்டத்தரணியிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்,

“மனுதாரர் நேரடியாக நீதிமன்றத்திற்குச் சென்று ஆஜராகி வாக்குமூலம் வழங்க முடியாதா?” என்று கேட்டார். “என் கட்சிக்காரர் முன்னிலையாக விரும்புகிறார். ஆனால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. விளக்கமறியலில் வைக்கப்படும் அபாயமும் உள்ளது. என் கட்சிக்காரர் கைது செய்யப்படமாட்டார் என்று உறுதிமொழி வழங்கினால் விசாரணைகளுக்கு உதவுவதற்கு தயார்.” என்றார்.

அதற்கு நீதிபதி, மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜரானால், அது தொடர்பாக நீதவான் பொருத்தமான உத்தரவைப் பிறப்பிப்பார். “அப்படியானால் அவருக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகும் வாய்ப்பு உள்ளதுதானே? என்று கேட்டார்.  அதற்கு சட்டத்தரணி, “கைது செய்யப்படமாட்டார் என்று உறுதியளித்தால் நீதிமன்றில் முன்னிலையாக தயார்” என்று மீண்டும் குறிப்பிட்டார்.

அப்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அத்தகைய உறுதிமொழியை வழங்க முடியாது என்று கூறினார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேலும் தனது வாதங்களை முன்வைத்து, இந்த மனுவை பரிசீலிக்க பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும், தனது கட்சிக்காரரை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை அமல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறும் நீதிமன்றில் கோரினார்.

அதன்படி, தேசபந்து தென்னகோன் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் விதிகளுக்கு முரணான வகையில், உண்மைகளை மறைத்து தாக்கல் செய்துள்ளதால், இந்த மனுவை ஒத்திவைக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, இந்த மனு மீதான தீர்ப்பை மார்ச் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என உத்தரவிட்டது.

COMMENTS

Wordpress (0)