
பிரதி அமைச்சர் மஹிந்த சிஐடியில் முறைப்பாடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனக்கும் தனது மகளுக்கும் எதிராக பரவி வரும் மிகவும் தவறான மற்றும் வன்மமான செய்தி தொடர்பில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த போலி செய்தியில், பிரதி அமைச்சரின் மற்றும் அவரது மகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, கொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய கடுமையான அவதூறு மற்றும் வன்மமான விடயங்கள் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ள பிரதி அமைச்சர், குறித்த பிறந்தநாள் விழா தனது மூத்த மகளால் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி கிரியுல்ல பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், தனது மகள் களனி பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக இருப்பதாகவும், அவர் தனியார் துறையில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த போலியான செய்தி மூலம், முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள தனக்கும், தனது அரசியல் இயக்கத்திற்கும் கடுமையான அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பொய்யான செய்தி மூலம் வேண்டுமென்றே அவமதிப்பு இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த தவறான செய்தி தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, அதற்கு தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தனது முறைப்பாடு ஊடாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளார்.