(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் நாள் ஒன்றுக்கான 700ரூபாய் வேதனத்தை உயர்த்தி நாளொன்றுக்கு 1500 ரூபாய் வழங்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம் நேற்று(20) கொத்மலை நகர மைதானத்தில் நடைபெற்ற நிலையில் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
சஜித் பிரேமதாச தொடர்ந்தும் உரையாற்றுகையில்; “…பொதுமக்களின் சக்தியினைக் கொண்டு புதிய ஒரு நாட்டினை உருவாக்குவேன். தேயிலை தொழிலை முன்னெடுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாதாந்தம் 14,000 ரூபாவை சம்பளமாக பெறுகின்றனர். அப்படியென்றால் நாளொன்றுக்கு 700 ரூபாவை பெறுகின்றனர்.
ஆனால் 4பேர் வசிக்கும் ஒரு குடும்பத்தில் 50 தொடக்கம் 55,000 ரூபா வரை அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்ல தேவைப்படுவதாக புள்ளி விபரம் கூறுகிறது.
இந்நிலையில் நான் ஆட்சிக்கு வந்தால் உங்களை வழி நடத்தும் திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் சார்பாக நாளொன்றுக்கு 1500 ரூபாவை சம்பளமாக வழங்க உறுதி வழங்குகின்றேன். இன்று 350 ரூபாய்க்கு உரம் வழங்குவதாக எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் விவசாயிகளை வெவ்வேறாக பிரிக்காது அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாகவே உரங்களை வழங்குவேன்…”