சவுதி அரேபியா வரலாற்று மைல்கல்லை தாண்டியுள்ளது – அமெரிக்கா

சவுதி அரேபியா வரலாற்று மைல்கல்லை தாண்டியுள்ளது – அமெரிக்கா

சவுதி அரேபியாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளது வரலாற்று மைல்கல் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கான அரச கட்டளையும் ஒன்று.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில் இடங்களுக்கு கடந்த சனிக்கிழமை  தேர்தல் நடந்தது. இதில், பொதுவாக்கெடுப்புக்கான தொகுதிகளில் 900-க்கும் அதிகமான பெண்கள் உள்பட 6,440 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் சவுதியின் பல்வேறு பகுதிகளில் போட்டியிட்ட பெண்களில் சுமார் 19 பேர் வெற்றி பெற்றுள்ளார். முதன்முறையாக பெண்கள் தேர்தலில் பங்கெடுத்து வெற்றி பெற்றுள்ளதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், இதனை வரலாற்று மைல்கல் என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.