சிறுபான்மையினரை எதிர்த்து 20வது திருத்தத்தை அரசு நிறைவேற்றின் நாம் ஒன்று கூடி எதிர்ப்போம்

சிறுபான்மையினரை எதிர்த்து 20வது திருத்தத்தை அரசு நிறைவேற்றின் நாம் ஒன்று கூடி எதிர்ப்போம்

வடக்கு,கிழக்கு மற்றும்  தென்பகுதியில் உள்ள சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புறந்தள்ளி  20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற அரசு தீர்மானிக்குமானால் பெரும் விளைவுகளையே கொண்டுவரும் என நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வடபிராந்திய உதவிப்பொது முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் அலுவலகம்  யாழ்.பண்ணைப் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அவர் மேலும்  கூறுகையில்;

வடக்கு கிழக்கிலும் தென்பகுதியிலும் உள்ள சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புறந்தள்ளி 20ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற அரசு தீர்மானிக்குமானால் அது பெரும் பின்விளைவுகளையே கொண்டுவரும்.

சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசு தற்போது சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செயற்பட்டு வருகின்றமை கவலை அளிக்கின்றன.

இவ்வாறான நிலையில் 20 ஆவது திருத்தம் சிறுபான்மை மக்களின் விருப்பங்களைப் புறந்தள்ளி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமானால் நாம் அனைவரும் ஒன்றுகூடி எதிர்ப்போம்.

அதுமட்டுமின்றி ஜே.வி.பி மூன்றாவது தடவையாக தென்பகுதியில் கலவரத்தில் ஈடுபடும் நிலையையே இந்த 20 அவது திருத்தம் ஏற்படுத்தும்.

இதை ஒரு அபாய எச்சரிக்கையாக நான் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

கட்டட திறப்புவிழா நிகழ்வில் மகளிர் விவகார பிரதி அமைச்சர், தமிழரசுக் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்  உட்பட நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.