கலப்பற்ற ஐ.தே.க. ரணில் விக்ரமசிங்கவுக்கு வேட்புரிமை வழங்குமா – முஸம்மில்

கலப்பற்ற ஐ.தே.க. ரணில் விக்ரமசிங்கவுக்கு வேட்புரிமை வழங்குமா – முஸம்மில்

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது கட்சியை தூய்மையான கட்சியென அழைத்து கொள்வதற்கு அமைய மத்திய வங்கி முறி பத்திர மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் ரணில் விக்ரமசிங்க உட்பட அந்த கட்சியின் தலைவர்களுக்கு வேட்புரிமை வழங்க மாட்டாது என தான் நம்புவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

நேற்று பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தலில் சிறந்த பதிலை வழங்குவார்கள் என நாம் நம்புகிறோம்.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் மத்திய வங்கியின் முறி பத்திர மோசடி உட்பட சகல ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும் நாங்கள் சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவோம் என்ற உறுதிமொழியை மக்களுக்கு வழங்குகிறோம்.

நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் உட்பட பிக்குமாரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான கலைஞர்களும் கடந்த காலத்தில் நல்லாட்சி குறித்து கடுமையாக குரல் எழுப்பி வந்தனர்.

இவர்கள் கூறியது போல் தற்போது இருப்பது மிக சிறந்த ஐக்கிய தேசியக் கட்சி. 5 ஆயிரத்து 400 கோடிக்கும் மேலான மக்கள் பணத்தை கொள்ளையிட்டு, திறைசேரியை சுத்தம் செய்து, அது தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியவர் என கோப் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வேட்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி வழங்காது என நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்.

அதேபோல், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ஜோன் அமரதுங்க, பாலித ரங்கே பண்டார, ரவி கருணாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, சஜித் பிரேமதாச தூய்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காது என எதிர்ப்பார்க்கின்றோம் எனவும் மொஹமட் முஸ்ஸமில் கூறியிருந்தார்.

(riz)