எஸ்.பி’க்கு எதிரான குற்றச்சாட்டை வாபஸ் பெற்றது குற்றப் புலனாய்வுப் பிரிவு

எஸ்.பி’க்கு எதிரான குற்றச்சாட்டை வாபஸ் பெற்றது குற்றப் புலனாய்வுப் பிரிவு

வைத்தியகலாநிதி சிவா சின்னத்தம்பி அவர்களால் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, கொழும்பு 07ல் அமைந்துள்ள வீட்டினை கையகப்படுத்தியதாக முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லையென்று சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார்.

பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கே.வி தவராசா தனது வாதத்தில் இதனை முன்மொழிந்திருந்தார்.

தொடர்ந்து அவரது வாதத்தில்,

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த ஆதனம் தொடர்பான உறுதிப்பத்திரத்தை கையளித்ததாகவும் இன்றுவரை இந்த ஆதனம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேரிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தபோதும்,

திட்டமிட்டு முன்னாள் உயர்கவ்வி அமைச்சரது நற்பெயரிற்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் இவ்வாறு ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தனது வாதத்தை முன்வைத்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் உயர்கல்வி அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லையென்பதை ஏற்றுக்கொண்டு அவர் தொடர்பான விசாரணைகளை முடிவிற்கு கொண்டுவருவதாகவும் இந்த வழக்குத் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்கள் சம்பந்தமான விசாரணைகளை தொடர்ந்து நடாத்துவதாக நீதிமன்றிற்கு தெரிவித்தனர்.

முன்னாள் உயர்கல்வி அமைச்ச்ர் எஸ்.பி திசாநாயக்கவின் சார்பில் சட்டத்தரணி திருநாவுக்கரசு ஜனகனின் அனுசரணையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி .தவராசா ஆஜரானார்என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)