உருளைக்கிழங்கு கிலோவொன்று 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானம்!

உருளைக்கிழங்கு கிலோவொன்று 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானம்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீரவின் அமைச்சில் கூட்டுறவு திணைக்கள ஆணையாளர் எஸ்.எல்.நசீரின் தலைமையில், உருளைக்கிழங்குக்கு நியாயமான விலையை பெற்றுத்தருமாறு கோரி பதுளை மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் ஆர்பிக்கோ, கீல்ஸ், லங்கா சதொச ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பதுளை மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனவும், எதிர்வரும் வாரங்களில் மழையை எதிர்நோக்கி இருப்பதால் உருளைக்கிழங்குகளை அதிகளவில் கொள்வனவு செய்யுமாறும் சங்கத்தின் உறுப்பினர்கள்தெரிவித்தனர்.

இதன்போது ஆர்பிகோ, கீல்ஸ், கார்கில்ஸ், லங்கா சதொச உள்ளிட்ட நிறுவனங்கள் மாதத்திற்கு தங்களால் குறிப்பிட்டளவு உருளைக்கிழங்குகளை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியுமென தெரிவித்தனர்.

இதனடிப்படையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகொளுக்கிணங்க கூட்டுறவு சம்மேளனம் உருளைக்கிழங்குகளை கொள்வனவு செய்து, கூட்டுறவு சங்கத்தின் ஊடாக பாவனையாளர்களுக்கு நியாயமான விலைக்கு விற்பனை செய்யும் எனவும், பதுளை மாவட்ட உருளைக் கிழங்கு
உற்பத்தியாளர்களினை பாதுகாக்கும் வகையில் அவர்களது உருளைக் கிழங்கு கிலோவொன்றுக்கு 90 ரூபா செலுத்தி கொள்வனவு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கை கூட்டுறவு சம்மேளனத்தின் பணிப்பாளர் முஹம்மத் றியாஸ் தெரிவித்துள்ளார்.

-ஊடகப்பிரிவு-