ஓமான் வளைகுடாவில் பயணித்த எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை கடும் நெருக்கடியில்

ஓமான் வளைகுடாவில் பயணித்த எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை கடும் நெருக்கடியில்

(FASTNEWS | COLOMBO) – கடந்த மாதம் 12 ஆந்திகதி சவுதி அரேபியாவின் இரண்டு பாரிய எண்ணெய்த் தாங்கிக்கப்பல்கள் உட்பட 4 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில். ஓமான் வளைகுடாவில் பயணித்த பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது நேற்று(13) காலை கடற்கண்ணி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் பின்புலத்தில் குறித்த தாக்குதல்கள் நடப்பதாக அமெரிக்கா சந்தேகப்படுவதால் இந்த புதிய சம்பவத்தின் மூலம் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் புதிய பதற்றநிலை ஏற்படக்கூடுமென அச்சநிலை உருவாகி ள்ளது.

இன்று தாக்குதல் நடத்தப்பட்ட எண்ணெய்தாங்கி கப்பல்களில் ஒன்றான கொகுகா குறாஜியஸில் இருந்து அதன் சிப்பந்திகள் 21 பேரும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தாக்குதல்களில் சிக்கிய ஒரு கப்பலில் பெரும் தீப்பிடித்ததை ஆதாரப்படுத்தும் நிழற்படங்களை ஈரான் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து உலக எண்ணைச்சந்தையில் மசகு எண்ணையின் விலை 4 வீதம் சடுதியாக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதியை சீர்குலைக்கும் வகையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதான ஐயங்கள் நிலவுகின்றன.

கடந்த மாதம் 12 ஆந்திகதி ஞாயிறன்று சவுதி அரேபியாவின் இரண்டு பாரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் ஈரானிய பின்புலத்தில் நடந்ததாக சந்தேகிப்படும் இரண்டு தாக்குதல்களில் சேதமடைந்திருந்தன.

அதன்பின்னர் சவுதிஅரசுக்கு சொந்தமான எண்ணெய் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி ஆயுததாரிகள் குண்டுகளை வீசித்தாக்குதல் நடத்தியதாலும் விநியோகம் சீர்குலைந்துள்ளது.

ரியாத் நகரில் இருந்து மேற்கில் உள்ள யான்பு நகருக்கு செல்லும் சுமார் 1200 கிலோமீற்றர் நீளமுள்ள குழாய்களே இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.

ஈரானிய எண்ணெய் விநியோகத்துக்கு அமெரிக்கா தடைவிதித்தால் ஹோர்மூஸ் ஜலசந்தி நீர்த்தடத்தை மூடிவிடப்போவதாக ஏற்கனவே ஈரான் எச்சரித்த நிலையில் இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

தற்போதைய நிலவரங்கள் மேலும் தீவிரமானால் உலக எண்ணெய் சந்தை கடும் நெருக்கடிக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.