தொலைக்காட்சிகளில் இராணுவ விளம்பரத்தினை இலவசமாக ஒளிபரப்புமாறு அழுத்தம்

தொலைக்காட்சிகளில் இராணுவ விளம்பரத்தினை இலவசமாக ஒளிபரப்புமாறு அழுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் பெரும்பான்மையான நேயர்கள் பார்வையிடும் நிகழ்ச்சிகளுக்கு இடையில் இலவசமாக விளம்பரம் செய்வதன் மூலம் புதிய துருப்புக்களைச் சேர்ப்பதற்கு ஆதரவளிக்குமாறு இலங்கை இராணுவம் தொலைக்காட்சி அலைவரிசைகளை கேட்டுக்கொண்டுள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது.

இராணுவத்தின் நிரந்தர படைப்பிரிவுக்கு தொழில்முறை மற்றும் தொழில்முறை அல்லாத தன்னார்வ படைவீரர்களை ஆட்சேர்ப்பு செய்வது இந்த வருட இறுதியில் நடைபெறும் என இராராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேர்முகத் தேர்வுக்கு அதிகமான இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய காணொளி உங்களுக்கு வழங்கப்படும். தொலைக்காட்சி செய்திகள், தொடர்கள் மற்றும் பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு இடையில் எவ்வித கட்டணமும் இன்றி அதனை ஒளிபரப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம். என வெகுஜன ஊடக பணிப்பாளர் சார்பில் கர்னல் வி.எம்.என் ஹெட்டியாரச்சியால், தொலைக்காட்சி நிகழ்ச்சி பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட துருப்புக்களைக் கொண்டு இயக்கப்படும் இலங்கை இராணுவத்திற்கு மேலும் துருப்புகளை இணைப்பதன் நோக்கம் என்னவென்பது எனவும் சமூகத்தின் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.