ரிஷாட் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

ரிஷாட் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைதுக்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று (16) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோரூடாக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும், கைதுக்கான முயற்சிகளினாலும் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்கள் தனக்கு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவரென்ற வகையில், இன்றைய தேர்தல் சூழலில் பல வேலைப்பாடுகள் உள்ளன. அடிக்கடி என்னைக் கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவது, எனது தேர்தல் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. மேலும், தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால், பல கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டியுள்ளது.

இதற்கு முன்னரும் அடிக்கடி என்னை விசாரணைக்கு அழைத்தனர். கடைசியாக பத்து மணி நேரம் நான் விசாரிக்கப்பட்டேன். இவ்வாறான செயற்பாடுகளால் எனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தப்படுவதாகவே நான் உணர்கிறேன். என்னை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும், நாடாளாவிய ரீதியில் எமது கட்சிக்குக் கிடைக்கவிருக்கும் ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறான திட்டமிட்ட சூழ்ச்சி நடைபெறுவதாக நான் கருதுகிறேன். எனவே, இந்தக் கைது முயற்சிகளைத் தடுத்து நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில், வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக “கொலொஸஸ்” நிறுவனத்திற்கு செப்பு விநியோகித்தமை பற்றி விசாரிக்கவே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரை அழைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஊடகப்பிரிவு –