யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு

யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிய உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, உயிர் மற்றும் உடமைகளை இழந்த மக்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்கும் முன்னோடி செயற்பாடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.

எதிர்வரும் 25ஆம் திகதி திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள நட்டஈட்டுக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களை தெளிவூட்டும் வகையிலேயே இச்சேவை மையம் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, இறக்காமம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உயிர் மற்றும் உடமை இழப்புகளுக்காக இதுகாலவரையில் வழங்கப்படாதுள்ள நட்ட ஈடுகள் இதன்போது வழங்கப்படவுள்ளன.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள ஆட்கள், சொத்துக்கள், கைத்தொழில்களைப் புனர்வாழ்வு அளிப்பதற்கான அதிகாரசபையினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் யுத்த காலத்தில் உயிரிழந்து இதுவரையிலும் மரணச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளதவர்களுக்கு அக்கரைப்பற்று பொலிசாரின் உதவியுடன் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு, காலங்கடந்த மரணப் பதிவுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.