சிரியாவில் நடாத்தப்பட்ட குழந்தைகள் மீதான விஷவாயு தாக்குதல் – ட்ரம்ப் முதன் முறையாக இரங்கல்..

சிரியாவில் நடாத்தப்பட்ட குழந்தைகள் மீதான விஷவாயு தாக்குதல் – ட்ரம்ப் முதன் முறையாக இரங்கல்..

சிரியாவில் நிகழ்த்தப்பட்ட விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் எந்நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாது எனவும், சிரியா மீதான தன்னுடைய பார்வை மாறியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று முந்தினம்(04) இரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது. குறித்த இந்த விஷவாயு தாக்குதலில் 20 குழந்தைகள், பெண்கள் உள்பட 72 பேர் உயிரிழந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன

குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை பிரதிநிதிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஷெய்க்குன் நகரில் போராளிகள் தங்கியிருந்த இடத்தின்மீது தங்கள் நாட்டு விமானப் படை சாதாரண ரக குண்டுகளையே வீசியதாகவும், குண்டு வீச்சின்போது போராளிகள் பதுக்கி வைத்திருந்த இரசாயன ஆயுதங்கள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

விஷவாயு வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் உலகை உலுக்கியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்துள்ள ஹோர்டான் மன்னர் உடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ,“சிரியாவில் நிகழ்ந்தது மிகவும் கொடூரமானது. எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாதது. இது எல்லை மீறிய தாக்குதல். குறிப்பாக பலியான குழந்தைகளின் புகைப்படங்கள் என்னை வெகுவாக பாதித்ததுள்ளது. சிரியா மீதும் சிரிய அதிபரின் மீதான எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிஞ்சுக் குழந்தைகள் மீதான விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் துளியும் மனித நேயம் இல்லாதது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பாதிக்கப்பட்ட மக்களுடன் அமெரிக்கா மற்றும் எங்கள் கூட்டணி நாடுகள் உறுதுணையாக நிற்கும். நடந்த இந்தச் சம்பவத்திற்கு உலகளாவிய கண்டனத்தை அமெரிக்கா பதிவு செய்கிறது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரை முற்றிலுமாக அழித்து பொதுமக்களை பாதுகாப்பதே எங்களது தலையாய பணி” எனவும் அவர் கூறியுள்ளார்.

(rizmira)