இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்; ஜாகிர் நாயக் விவகாரம்

இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்; ஜாகிர் நாயக் விவகாரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விடுதலைப் புலிகள், ஜாகிர் நாயக் விவகாரங்களை தொடர்புப்படுத்தி வெளிப்படையாகப் பேசி வருகிறார் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி.

இந்நிலையில், இவர் மீது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார் ஜாகிர் நாயக்.

தம்மை பற்றி ஊடகங்களில் கருத்து தெரிவிக்க ராமசாமிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தமது மனுவில் ஜாகிர் நாயக் வலியுறுத்தி உள்ளார்.

இதற்காக துணை முதல்வர் ராமசாமிக்கு, ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளது ஜாகிர் நாயக் தரப்பு.

மலேசியாவின் பாதுகாப்புக்கு தாம் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, தம்மை ஏளனப்படுத்தி, மோசமாக சித்தரித்ததாகவும் ராமசாமி மீது ஜாகிர் நாயக் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் விவகாரத்தை மதபோதகர் ஜாகிர் நாயக்குடன் ஒப்பீடு செய்வது ஏன்? என பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ முஜாஹித் யூசோஃப் கேள்வி எழுப்பியுள்ளார்.

“புலிகள் விவகாரம் குறித்துப் பேசும்போது எதற்காக ஜாகிர் நாயக் பெயரை இழுக்கிறார்கள். அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.”

“தீவிரவாத தொடர்புகள் இருப்பின் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாதவர் எனும் பாகுபாடு ஏதுமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கும். தகுந்த ஆதாரங்கள் இருப்பின் இதற்காக யாரை வேண்டுமானாலும் பொலிஸார் தடுத்து வைக்கலாம்,” என்று அமைச்சர் முஜாஹித் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மலேசியாவில் புத்துயிரூட்ட சிலர் முயற்சிப்பதாக மலேசிய பொலிஸ் தெரிவித்துள்ளது. அந்த இயக்கத்திற்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கிளைகள் இருப்பதாகவும், நிதி திரட்டுவது, பிரசாரம் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக கருத்துரைத்த துணை முதல்வர் ராமசாமி, ஜாகிர் நாயக் விவகாரத்திலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதை அடுத்தே புலிகள் விவகாரத்தில் மதபோதகர் ஜாகிர் நாயக் பெயரை இழுப்பது சரியல்ல என்று அமைச்சர் முஜாஹித் யூசோஃப் கூறியதாகக் கருதப்படுகிறது.

ஜாகிர் நாயக்கின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக துணை முதல்வர் ராமசாமி கூறியுள்ளார்.

ஜாகிர் நாயக்கை ஏளனப்படுத்தவும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் தமது தரப்பில் எத்தகைய காரணங்களும் இல்லை என்கிறார் ராமசாமி.

“பின்வாசல் வழியாக மலேசியாவில் நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றுள்ள ஒருவர், இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த என் மீது வழக்குத் தொடுக்கிறார். பல்வேறு இனங்கள், மதங்களுக்கு மத்தியில் வெறுப்புணர்வையும் பதற்றத்தையும் அவர் ஏற்படுத்தி உள்ளார். என்னை நீதிமன்றத்திற்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காக சிலர் அவருக்கு தைரியம் அளித்துள்ளனர். எனவே நீதிமன்றத்தில் சந்திப்போம். என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன,” என்று ஜோர்ஜ் டவுனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை முதல்வர் ராமசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஜாகிர் நாயக் குறித்து தாம் கருத்து தெரிவிப்பதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவையும் தாம் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட ராமசாமி, தம்மிடம் உள்ள ஆதாரங்களை நீதிமன்றத்திடம் அளிக்கப் போவதாகக் கூறினார்.

“பங்களாதேஷ், இலங்கையில் நிகழ்ந்துள்ள பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன. மேலும், கிளந்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் தெரிவித்த இனவாதக் கருத்துக்கள் குறித்தும் தெரிவிப்போம்.”

“பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது. எனினும் அந்நாட்டைத் தவிர வேறு எந்த நாடும் அவரை விரும்பவில்லை,” என்று துணை முதல்வர் ராமசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

(பிபிசி தமிழ்)