ஆகஸ்ட் முதல் விமான நிலையத்தை திறக்க முன்மொழிவு

ஆகஸ்ட் முதல் விமான நிலையத்தை திறக்க முன்மொழிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளது.

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நேற்று (26) வரை கொவிட் தொற்றுடைய எவரும் சமூகத்திலிருந்து இனம் காணப்படாமை நாடு அடைந்த வெற்றியாகும் என்று குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கொவிட் ஒழிப்பு செயலணி ஒன்றுகூடியது.

சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் செயற்பாடுகள் சர்வதேச மற்றும் உள்நாட்டு சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். ஏலவே திட்டமிடுவதன் மூலம் ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் முன்னிற்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. முன்னுரிமைகளை அறிந்து சுற்றுலா மற்றும் சுகாதார துறை நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முதலாவது கட்டத்தின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளின் உள்ளக பயன்பாட்டுக்காக (In house Dining) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் முன்னேற்றத்திற்கு ஏற்ப பதிவுசெய்யப்படாத

நிறுவனங்களையும் இராணுவத்தின் உதவியுடனும் பொதுச் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்புடன் சிற்றுண்டிச் சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் அதிகமுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமையளித்து வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி பெற்ற சுற்றுலா பொலிஸ் பிரிவொன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

´சுற்றுலா பயணிகளை கவரும் விடயத்தில் அவர்களின் விருப்பங்களை கண்டறியுங்கள். சிலர் கடற்கரைகளில் ஓய்வெடுப்பதை விரும்புவர், சிலர் தொல்பொருள்கள், வனசீவராசிகளை பார்க்க விரும்புவர், சிலர் தேயிலை தோட்டங்களை பார்வையிட விரும்புவர். அதற்கேற்ற வகையில் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை தயாரியுங்கள்´ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர ஆகியோரும் கொவிட் ஒழிப்பு செயலணியின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)